நகுவா நயனா (சிறுகதை)

நகுவா நயனா



கிழ்ச்சியை பிறரிடம் பகிர அது இரட்டிப்பாகும், துக்கத்தை பிறரிடம் பகிர அது பாதியாய் குறையும் என்பார்கள். ஆனால், சில மகிழ்ச்சியையும் சரி, சில துக்கத்தையும் சரி எவரிடமும் பகிர முடியாது. அப்படி பகிர முடியாத இரகசியங்கள் தான் கடவுளைத் தேடச் சொல்கிறது. கடவுளிடம் பகிர்வோம் என்று மனதை தேத்திக்கொள்ள வைக்கிறது. ஆனால் ஜனார்த்தனனுக்கு கடவுள் நம்பிக்கை துளியும் இல்லையே. கோத்தகிரி வட்டாரமே அவனது கட்டுப்பாட்டில், அவனது அதிகாரத்தில் இயங்கிக் கொண்டிருக்க, அப்போது அவனுடைய மனதின் கட்டுப்பாடு அவனிடம் இல்லை. முகத்தை முழுவதும் சவரம் செய்ததால், நாற்பது வயதின் அடையாளமான சதை முகத்திற்கு கீழே கழுத்தை கொஞ்சம் மறைத்துக் கொண்டிருப்பது, எதிரில் உள்ள அவனுடைய அலுவலகக் கண்ணாடியில், நன்றாகத் தெரிகிறது. அதனைத் தடவிக் கொண்டே யோசித்துக் கொண்டிருந்தான். ஜனவரியின் குளிருக்கு காலை பதினோரு மணியெல்லாம் தெரியவில்லை. எழுந்து அறையின் ஹீட்டரை போட்டுவிட்டு அமர்ந்தான்.


அலுவலக உதவியாளர் பம்பியபடி கதவிடம் வந்து நின்றார். ஜனார்த்தனன்  "வாங்க" என்றதும், அலுவலக வருகை குறிப்பேடுகளை கட்டிக்கொண்டு உள்ளே வந்தார். அதை அவனின் மேசை மீது வைத்துவிட்டு "சார்... இங்க அக்கவுண்டண்டா இருந்து, ஈரோடுக்கு டிரேன்ஸ்ஃபர் வாங்கீட்டு போனாப்படியே லோகநாதன்... அவரு கல்யாண பத்திரிகை வைக்க வந்திருக்காரு... சேர்மேன் ரூம்ல வெச்சிட்டிருக்காரு" "ஓ" அலுவலக உதவியாளர் ஓவைத் தாண்டி உற்சாகமான பதிலை எதிர்பார்த்து ஏமாந்தார் என்பது அவரது வெளியில் செல்லும் முகத்தில் தெரிந்தது.


வாழ்க்கையில் எல்லாம் நன்றாக சென்று கொண்டிருந்தது. இதற்கு பிறகு எப்படி இருக்கும் நம் வாழ்க்கை என்று யோசித்தான், ஜனார்த்தனன். சின்ன வயதிலிருந்து, தான் செய்த தவறுகளை ஜனார்த்தனனின் மனம் அலசிக் கொண்டிருந்தது. அதுவரை பெரிதாக தவறுகளோ, அவனது மனதை வருத்தும் குற்றங்களோ அவனறிந்து செய்யவில்லை. வட்டார வளர்ச்சி அலுவலராக இருப்பதால் ஒப்பந்ததாரர்கள் மூலம் வரும் தவிர்க்க முடியாத இலஞ்சத்தை அலுவலக மேம்பாட்டிற்கும், நண்பன் மூலம் அறக்கட்டளை தொடங்கி அதற்கும் கொடுத்து வந்தது, அவனை அது வரை நிறைவாகவே வைத்திருந்தது. அவனை நீண்ட நாட்களாக உறுத்திக் கொண்டிருந்தது ஒன்று தான். அவன் செய்த குற்றங்களை யோசிக்கும் போது அது மட்டும் தான் நினைவுக்கு வந்தது. பேருந்திலோ, எதாவது கடையின் பெயரிலோ 'கீதா' என்ற பெயரைக் கடக்க நேர்ந்தால் வரும் உறுத்தல் அது. 


அவனுடைய பெற்றோர் மீது வைத்திருந்த அதீத பாசத்தால், அவர்களின் சுயசாதி கௌரவத்திற்கு தலையாட்டுவதற்காக கல்லூரியில் காதலித்து வந்த கீதா, வேறு சாதி என்பதால், அவர்களுக்கிடையே ஏற்பட்ட சிறிய சண்டையை, திட்டமிட்டு பெரிதாக்கி பிரிந்துவிட்டு, வாழ்க்கையின் இலகுவை எண்ணி சுயசாதி பெண்ணை மணந்தது. அது வாழ் நாள் முழுக்க தொடரும் உறுத்தலாகும் என்பதை ஜனார்த்தனன் அப்போது உணரவில்லை. 


நீண்டு நாட்களுக்கு பிறகு கீதாவை நினைக்கிறான். இடையில் அவள் நினைவு வரும் பொழுது குற்ற உணர்வு மேலோங்காமல் இருக்க, வேண்டுமென்றே வேறு எதாவது கடினப்பட்டு சிந்திக்க முயற்சிப்பான், தனிமையைத் தவிர்ப்பான். ஆனால் இப்போது அவள் நினைவை அது போக்கில் விட்டுவிட்டு பின் தொடர்கிறான். 


கல்லூரிக்குப் பிறகு அவள் முகத்தை அவன் பார்க்கவே இல்லை. மங்கியவாறு அவளின் தோற்றம் நினைவு வருகிறது. அவள் அற்புதமானவள். நுணுக்கமாக எல்லாவற்றையும் இரசிப்பவள். தாய்மொழி கன்னடம். கோபம் வந்தாலும் சரி, காதல் வந்தாலும் சரி கன்னடத்தில் வெளிப்படுத்துவாள். ஒரு முறை பேருந்தில் செல்லும் போது முதல் முத்தத்தை அவள் தான் கொடுத்தாள். அவன் அம்மா கூட அவனுக்கு விவரம் தெரிந்த பிறகு முத்தம் கொடுத்ததாக நினைவில் இல்லை. 'நகுவா நயனா' பாடலை அவள் தான் அவனுக்கு அறிமுகப்படுத்தினாள். அவர்கள் கல்லூரி படித்த போது, அப்பாடலை அவள் மேடையில் பாடியிருக்கிறாள். அந்த கன்னடப்பாடலை ஒவ்வொரு நொடியாக அவள் இரசித்தாள், அதன் பொருளை தமிழில் மொழி பெயர்த்தும் ஜனார்த்தனனுக்கு சொல்லுவாள். "நகுவா நயனா மீன்ஸ் ஸ்மைலிங் ஐஸ், மீன்ஸ்ஸ்ஸ் சிரிக்கும் கண்கள், மதுரா மௌனா, மதுரமான அமைதி, மிடிவா ஹிர்தையா, துடிக்கும் இதையம், இரெ மா தேக்கே?... இதுக்கு நடுவுல வோர்ட்ஸ் எதுக்கு? இந்த ஸிச்சுவேஸனே கவிதை மாதிரி இருக்குல" என்று அவள் பூரித்தததை ஜனார்த்தனனின் நினைவு அள்ளி எடுத்தது. சண்டை, அது, இது என்று அவளை விட்டு விலகினாலும், அவனுக்குத் தான் தெரியுமே சாதி தான் அவளை அவன் பிரிய அடி நாதமென்று. ஆரம்ப காலகட்டத்தில் அந்த உறுத்தலில் இருந்து அவனால் மீளவே முடியவில்லை.


திருமணம் ஆன அடுத்த சில நாட்களிலேயே பெற்றோரை அடக்கும் அதிகாரம் எளிமையாக ஜனார்த்தனன் வசமானது. திருமணத்திற்கு முன்பே இந்த அதிகாரத்தை உணர்ந்திருந்தால், இப்போது தன்னுடன் கீதா இருந்திருப்பாளே… அவனுக்கு மணமான கொஞ்ச நாட்களிலேயே கீதாவுக்கும் திருமணம் என்ற செய்தி அவனை கொஞ்சம் அமைதிப்படுத்தியது. ஆனால் எப்பாவது காதலித்தவரையே மணம் புரிந்து கடினப்பட்டு போராடி வாழ்க்கையை நடத்திக் கொண்டிருப்பவர்களை பார்க்கும் போது பொறாமையுடன் கூடிய கோலைத் தனம் அவனை அறையும். அதை அவன் கடந்து வந்துவிட்டான். குழந்தை ஒன்று பிறந்த பிறகு, பெரிய சுவாரஸ்யம் இல்லை என்றாலும், நிம்மதியாக, ஏன் மகிழ்ச்சியாகத் தான் வாழ்க்கை சென்று கொண்டிருந்தது.


'இப்போது, தான் செய்தது சரியா, தவறா?' ஜனார்த்தனன் மனதில் எழுந்த கேள்விக்கு 'அது தவறு' தான் என்றாலும், அதை செய்யாமல், வேறு வழி உகந்ததாக இல்லையே என்றும் மனமே பதில் கூற போராடிக் கொண்டிருந்தது. ஒரு பக்கமாக தலை வலித்தது. அருகிலிருந்த ஃப்ளாஸ்க்கை எடுத்து வெந்நீரை குடித்திவிட்டு கண்களை மூடி யோசித்தான். இச்சமூகம் என்ன நினைக்கும்?! எப்படி இவர்களை எதிர் நோக்குவது? என்று யோசித்த போதே இப்படி இவனுகளை நினைத்து தான் கீதாவை இழந்தாய்... கீதா என்ற மகிழ்ச்சியை பிறரிடம் பகிருவது என்ன? உன்னுடன் உன் மனதோடு நினைவாக மீட்டிக்கொள்ள கூட முடியாமல் பதிமூன்று வருடமாக நடுங்கிக் கொண்டிருக்கிறாய். இப்போதும் இவனுகளை நினைத்து பின்னாடி மீதமுள்ள வாழ்க்கையையும் குற்ற உணர்வோடே நாசம் பன்ன போகிறாயா?! என்றது அவன் மனது. உடனேயே சேர்மேனுக்கு நாம எத்தன பன்னீருக்கோம், அவரிடம் எதுவும் இது வரை நாம் எதிர்பார்த்தது இல்லையே, இப்போது இந்த விசியத்தில் அவர் நிச்சியம் உதவுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. என்ன மாதிரியான சிக்கல் இதில் வந்தாலும் கொஞ்ச நாளில் தப்பித்துவிடலாம், நல்ல பாடமாக இது அமையும், நம்பிக்கை துரோகத்தின் வலி கொடியது என மற்றொரு பக்கம் ஜனார்த்தனனை அலைக்கழித்தது மனது. 


ஒரு மனிதனின் ஆசை இன்னொரு மனிதனுக்கு இத்தனை துன்பத்தைக் கொடுக்குமா? அவர் தனி உயிர், நான் தனி உயிர் என்று தெளிவாக விளங்கிய போதும் ஏன் நம்மால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை? இதற்கான தைரியம் ஓரிரவில் எப்படி நமக்கு வந்தது? இதையெல்லாம் நினைத்த போதே, எதுக்கு இத்தனை பிரச்சனைகளை உருவாக்கிக்கனும், இதை இப்போதே முடித்துவிடலாமே என்றும் தோன்றியது. இல்லை இவ்வளவு தூரம் வந்துவிட்டாய், இதற்கு மேல் என்ன? நீ செய்தது சரி தான், இதற்கு பிறகும் இதனை எப்படி சரியாக செய்து முடிக்கலாம் என்று யோசி என்றும் ஜனார்த்தனனை தட்டியது அவன் மனது. 


அவரவர் செயலுக்கான தண்டனை என்பது நியாயம் தானே. அதை அனுபவித்துத் தான் ஆக வேண்டும். இதற்கு பிறகான வாழ்க்கையை ஏற்று தான் ஆக வேண்டும். இதை இப்படியே தொடருவோம். திட்டத்தில் மாற்றம் வேண்டாம். இதுவரை என் உச்சபட்ச மகிழ்ச்சியைப் பகிர தான் முடியாமல் தவித்தேன், அதனுடன் சேர்த்து இந்த துக்கத்தையும் பகிர முடியாது. அவ்வளவு தானே. திடமான முடிவுக்கு ஜனார்த்தனன் வந்த போது லோகநாதன் உள்ளே நுழைந்தான். 


ஜனார்த்தனன் "வாப்பா" மிகச்சிறிய சிரிப்புடன் வரவேற்றான். "உக்கோருங்க". ஜனார்த்தனன் முகத்திற்கு நேர் எதிராக லோகநாதன் முகமெல்லாம் புத்துணர்ச்சி. பத்திரிகையை நீட்டினான். "டெப்டி பீ.டீ.ஓ ஆனா தான் கல்யாணம்னு இத்தன வருசம் டிலேவா?" என்று ஜனார்த்தனன் அலுவலக சம்பிரதாய கேலியை செயற்கையாக முன் வைக்க, "சார்... அப்புடி இல்ல... லவ் மேரேஜு... வீட்டுல கன்வீன்ஸ் பன்றதுக்கு இத்தன நாள் டைம் எடுத்திருச்சு..." "லவ் மேரேஜா?!... காலேஜா?" "சார் இல்ல... பொண்ணு கோத்தகிரி தான்... உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்னு நெனச்சேன்... பஸ் ஸ்டாண்டுல மகாராஜா சூப்பர் மார்கெட்ல வேல பாக்குறாங்க, கிருஷ்ணவேணி" ஒரு அவசரத்தில் "காலணி பொண்ணா!?" என்று கேட்டுவிட்டு கேட்டிருக்கக் கூடாதோ என்றும் தோன்றியது ஜனார்த்தனனுக்கு, லோகநாதன் முகத்தில் உள்ள சிரிப்பு களையாமல் தலையை ஆட்டினான். ஜனார்த்தனனுக்கு கோத்தகிரி குளிரில் வியர்க்க ஆரம்பித்தது. கீதா தொடர்பான கோலை தனம் இம்முறை அடித்ததில் அவன் மனதிற்குள் அவன் சுருண்டு விழுந்தான். பேசாமிலிருந்த ஜனார்த்தனனை "சார்..." என்று தன்னிலைக்குக் கொண்டு வந்தான், லோகநாதன். "ஹேய்... எப்படி வீட்டுல கன்வீன்ஸ் பன்னுன?" மரியதையாக சிரித்து "கஸ்டம் தான் சார்... நம்மல பெத்தவங்களையே பேசி நம்ம நாள புரிய வைக்க முடியலைனா இந்த உலகத்துல வேறு யார்ட்ட பேசி நம்ம என்ன ஜெயிக்க போறோம்னு தோணுச்சு... டைமெடுத்துப் பேசி அவுங்களுக்கு புரிய வெச்சேன்" ஜனார்த்தனன் உள்ளுக்குள் புதைந்து கொண்டிருந்தான். "எங்க அப்பா கூட பெரிய எதிர்ப்பில்ல சார்... எங்க அம்மா தீவிரமா சாதி பாக்கும்... சாதி பாக்குறாங்கனா அவுங்க நல்லவுங்க இல்லைனு அர்த்தமில்லல சார்... அறியாமைல இருக்குறாங்க... கொஞ்சம் வொர்க் பன்னி கொஞ்சம் டைம் கொடுத்தா சேஞ்சு ஆவாங்க... அதான் இவ்ளோ டிலே" வேறு எந்த வார்த்தைகளும் பிடிபடாததால் ஒருவாராக சமாளித்தபடி "சூப்பர்ப்பா..." என்றான் ஜனார்த்தனன். "ஈரோட்டுல கல்யாணம், கோத்தகிரில ரிசப்சன்... ரெண்டுக்கும் வந்திருங்க சார்" "கண்டிப்பா" என்றபடி எழுந்து நின்று வழி அனுப்பும் போது "லோகு... இப்படி தான் என்னோட காலேஜ் டைம்ல கீதானு ஒரு பொண்ணு, லவ் பன்னி கல்யாணம்னு யோசிக்கிறப்ப சாதிக்கு பயந்து ஏதேதோ பன்னி... ரொம்ப காம்ப்ளிக்கேட் பன்னிக்கிட்டேன்" லோகநாதன் எதுவும் பேசவில்லை. அவர் பேசுவதை கேட்டாலே அவருக்கு ஆறுதலாக இருக்குமென்று நினைத்தான்.  "யூ மெச்சூர்ட்... எதாவது ஹெல்ப்னாலும் எப்பனாலும் எனக்கு கூப்பிடு" லோகநாதன் அதே சிரிப்புடன் "கட்டாயங் சார்" என்று கிளம்பினான். 


கல்லூரிக்குப் பிறகு கீதாவைப் பற்றி முதன் முறையாக ஒருவருடன் பகிர்ந்திருக்கிறான். "அவள் ஒரு மகிழ்ச்சி" என்று சொல்லிக் கொண்டான். மிருதுவாக உணர்ந்தான். கீதாவை அவன் மனம் தைரியமாக இப்போது நினைத்தது. செய்த குற்றத்தை வெளிப்படையாக ஒருவரிடம் ஒப்புக்கொண்டதே பெரிய நிம்மதியாக இருந்தது அவனுக்கு. கோத்தகிரி குளிரில் உடம்புக்கு இதமாக வெந்நீரில் குளித்து வந்தது போல், அத்தனை கதகதப்பை நீண்ட நாட்களுக்குப் பிறகு உணர்கிறான். அவ்வளவு நேரம் அலைகழித்துக் கொண்டிருந்த மனதிற்கு ஒரு தெளிவு கிடைத்தது. அவனை சுற்றி உள்ளவர்களுக்கு பயந்து கீதாவை இழந்தது போல் இம்முறை இந்த முட்டாள் தனத்தை செய்துவிடக் கூடாது. தான் செய்ய இருப்பது பெரிய தவறு என்று உணர்ந்தான். 


மணியைப் பார்த்தான். பன்னிரெண்டு காட்டியது. அவசரமாக தன் அலைபேசியை எடுத்து மனைவிக்கு அழைத்தான். "சொல்லுங்க" என்றாள் "சாப்பிட்டுடையா?" என்றான், "இன்னும் இல்லைங்க" "ஓகே... இங்க பாரு... அத சாப்பிடாதா... தென்னை மரத்து மாத்திரை அதில கலந்திருக்கேன்... சாரீ... நாலு நாளைக்கு முன்னாடி நீ பேசுனத தெரியாம கேட்டுட்டேன்... உனக்கு தெரியாம உன் ஃபோன எடுத்தும் பாத்திட்டேன்... கல்யாணம் ஆகீட்டா இன்னோருத்தரு மேல ஆச வரக்கூடாதுனு இல்ல, பட் அத என்ட்ட ஓப்பனா சொல்லீருக்கலாம்ல..." மூச்சை உரிந்துவிட்டு "ரெண்டு நாளா நா தூங்குல தெரியுமா?" என்றான். பதறியவள் எதோ சொல்ல வந்தாள் "இல்ல நீ ரீசன் சொல்லாத.. டிவர்ஸ்க்கு கோப்ரேட் பன்னு... புரியுதா உனக்கு... சித்து இப்போதைக்கு எங்க அம்மா வீட்டுலையே இருக்கட்டும்... சித்துவ பத்தி நாம நேருல பேசிக்கலாம்..." என்று தன் மகன் சித்தார்த்தின் வாழ்க்கை அடுத்து எப்படி இருக்குமென ஒரு நொடி யோசித்துவிட்டு "ஹலோ இருக்கையா?!" "ம்ம்" என்றாள் "நான் எங்க உன்ன எங்கேஜுடா வெச்சுக்காமா மிஸ் ஆனேனு எனக்குத் தெரில... சாரீ ஜோதி" "இல்லங்க... நேருல உங்களுக்கு புரிய வைக்குறேங்க" "ஸ்யூர் நீ சொல்லு, நான் கேக்குறேன்..." அவள் எதுவும் பேசவில்லை "ஈவ்னிங் பேசுவோம்" என்று வைத்தான். பல வருட பெரு மூச்சுடன் சிறுநீர் கழித்துவிட்டு வந்து, அலைபேசியில் கல்லூரிக்குப் பிறகு முதன் முறையாக  அப்பாடலைப் போட்டு, கண்களை மூடி, குளிருக்கு தன் கைகளை இருக்கமாகக் கட்டிக்கொண்டான். ஜானகி அம்மாவின் லலலாவைத் தொடர்ந்து எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் குரலில் நகுவா... நயனா... மதுரா... மௌனா... மிடிவா... ஹிர்தையா... இரெ மா தேக்கே... 



-சா.கவியரசன்

24-12-2023


Comments

  1. உண்மைச் சம்பவங்களை தழுவி எழுதப்பட்ட கதையா இது ?... சில எடத்துல இது உண்மை, இல்ல இல்ல இது அவன் ex பத்தி சொல்லுறான்... இல்ல இது அவன் office la உண்மையாகவே நடந்த சம்பவம் link ஆகிருக்கு... kannada kuda yen link panirkaan?... அது தெரில...
    இந்த மாதிரி Background Voices oda தான் படிச்சு முடிச்சேன் கவி...

    Padikrapo Idhu Realistic ah irukku 🥹

    Indigenous Kannada Ponnunga semma azhagaa irupanga da kavi 😍... Naa Bangalore la irundhapo partha places and bus travel ellam imagine panen ipa...

    And andha paatu ❤️❤️ indha story ku Magic 🪄 touch...

    🫥 Indha story padikalana idhukapro andha song Naa ketrupananey theriyala....

    SPOTIFY la Kaasu kekran nu uninstall paniten... JIOSAAVN la adhey name la vera songs dha vardhu...

    Nera YouTube Poitu search pani...Full Video Song ipo dha ketu mudichen...

    Naguvaa Nayanaa...
    Madhura Mounaa !!!...🎧

    ReplyDelete
  2. Nice story kavi yentha problem naalum Samantha pattavanga kitta atha pathi pesi solve pannanumngratha correct ahh sollirukinga and ...👍🤝

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அந்த ஆங்கில வார்த்தை

87 - 38A (சிறுகதை)