சரணம்



சரணம் - சிறுகதை

நீங்கள் எப்பாவது ஆண்களின் பொது கழிப்பிடத்திற்குள் நுழைந்திருக்கிறீர்களா? குறிப்பாக அரசுப் பேருந்து நிலையத்தில் உள்ள ஆண்கள் கழிவறைக்குள் சென்றிருக்கிறீர்களா? இன்னொரு இடைக் கேள்வி, கடவுள் நம்பிக்கை எந்த அளவுக்கு தங்களுக்கு இருக்கிறது?! 

ஆண்களின் பொது கழிவறைக்கு வருவோம், உமட்டும் யூரியா நெடியுடன் பீடி, சிகரெட் கலந்த மலத்தின் கலவையான நாற்றம். மலம் கழிப்பதற்கு ஐந்து தனி அறைகள், முதல் அறையில் குழாய் உடைந்து, அதிலிருந்து நீர் சென்று, குழாய்க்கும் மலக்குழிக்கும் இடையே பாசி வளர்ந்திருக்கிறது. இன்னொரு அறையில், ஓரத்தில் மூன்று மதுக் குடுவைகள், அதில் அரை வாசிக்கு செம்மஞ்சல் நிறத்தில் திரவம். அது சிறுநீரா? அல்லது மீதமான மதுவா? என்ற சந்தேகம், அடுத்த அறையில் குழி நிரம்பி, நீர் மிதக்க, அது நிறைய வெவ்வேறு வடிவத்தில் மலம் மிதக்க, உடனே அடுத்த அறைக்குச் சென்றேன், ஓரத்தில் வாந்தி, ஒழுங்காக நீர் ஊற்றாமல் மலம் மிதக்கும் குழி, வேண்டாமென்று அடுத்து அறை, கதவை நீக்கினால் 'யெப்பா' என்ற சாதாரண பதட்டத்துடன் பீடி குடித்துக் கொண்டு ஒருவர் குத்தவைத்து மலம் கழித்துக் கொண்டிருக்கிறார், அங்கு தாழ்பாள் இல்லை. அந்த அறைகளுக்கு நடக்கும் டைல்ஸ் தரையெங்கும் நடப்பவர்களின் செருப்பில் ஒட்டி வந்த சேரும், நீரும், சிதறி கிடக்கும் வாந்தியும், சிறுநீரும் கலந்திருக்கிறது. அந்த ஐந்து அறைக்களுக்குள் உள்ள ஒற்றுமைகள், ஹான்ஸ் பாக்கெட்டுகள், கூல் லிப் எச்சங்கள், மலத்துடன் மிதக்கும் பீடித் துண்டுகள், நீரில் ஊரிப் போய் கிடக்கும் தீக்குச்சிகள், பாக்கின் காரித் துப்பிய காவிக் கரைகள், அடர் கருப்பு நிறத்தில் ஒரு வகையான ஈக்கள். அந்த ஐந்து அறையும் வேண்டாமென்று சிறுநீர் கழிப்பதற்காக பிரத்யேகமாக கட்டப்பட்ட, சுவர் ஓரக்குழாயில் சிறுநீர் கழிக்க எத்தனித்தேன்.அந்தச் சூழலால் மூன்று நிமிடமாக சிறுநீர் வரவில்லை, ஒரு வழியாக மூச்சுப் பயிற்சியெல்லாம் செய்து சிறுநீர் வருகிறது. குழாய் இணைப்பு சரி இல்லாமல், என் காலிலேயே சிறுநீர் தெரிக்கிறது. எரிச்சலானேன். எனதருகில் இன்னொருவர், மிகவும் சாகுவாசமாக எந்த வித அருவருப்புமின்றி சிகரெட்டைப் பற்ற வைத்தபடியே சிறுநீர் கழிக்கிறார். அந்த நாற்ற ஆலைக்குள் சிகரெட் புகை என் நாசியின் உச்சத்தை சோதித்து பார்க்கிறது. பக்கத்தில் சிகரெட் குடித்துக் கொண்டிருப்பவருக்கும், முன்னாடி மலம் பக்கத்தில் பார்த்த பாசியில் இருக்கும் நுண்ணுயிரியிக்கும், அங்கு பறக்கும் ஈக்களுக்கும் இடையே உள்ள ஆறு வித்யாசங்களைக் கணக்கிடத் தோன்றியது. 

சரி, இந்த ஆண் பொதுக் கழிப்பிடத்திற்குள் காலில் செருப்பு இல்லாமல் நினைத்துப் பாருங்கள்! சபரி மலை ஆண்டவனுக்கு மாலை போட்டிருந்தேன். என்னுடன் ஒரு இருபது பேர் மாலை போட்டு வந்திருக்கிறோம். அதில் நான் மட்டும் தான் அறிவில்லாமல் இப்படி ஆண் பொதுக் கழிப்பிடத்திற்கு வந்துவிட்டேன். மிச்சமுள்ளவர்கள்,  பேருந்து நிலையத்தின் ஒரு ஓரத்தில் சென்று, பேருந்துகள் கிளம்புகின்றன, அதில் பொது மக்கள் வேடிக்கை பார்க்கிறார்கள், அதைப் பற்றிய கவலை இல்லாமல், மக்களுக்குரிய இயல்பான குணம் போல்,  மணி கண்டனுக்காக கட்டிய கருப்பு வேட்டியைத் தூக்கி, மலத்தின் அவசரத்தை தனித்துக் கொண்டார்கள். 

எங்களை அழைத்துச் செல்ல நாங்கள் ஏற்பாடு செய்திருந்த சிற்றுந்து வந்தது. நான் அப்போது தான் முதல் முறையாக ஐயப்பனுக்கு மாலை போடுகிறேன். எனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறதா? இல்லையா? என்பதே குழப்பம். 'தேகம் பலம் தா, என்றால் அவரது தேகத்தைத் தந்திடுவார், பாதம் பலம் தா என்றால் அவரது பாதத்தைத் தந்திடுவார், நல்ல பாதையைக் காட்டிடுவார்' என்ற வரிகளில் ஈர்க்கப்பட்டதா? இல்லை, யேசுதாஸ் குரலில் ஹரிவராசனத்தில் ஈர்க்கப்பட்டதா? நான் பள்ளியில் படிக்கும் போது எனக்குப் பிடித்த ஆசிரியர் ஒருவர் ஐயப்பனுக்கு விரதமிருந்து தாடியெல்லாம் வளர்த்துக் கொண்டு, கருப்புத் துண்டை இடுப்பில் கட்டிக் கொண்டு, பாடம் எடுக்கும் போது அவரைப் பார்த்து ஏற்பட்ட கவர்ச்சியா எனத் தெரியவில்லை, மொத்தத்தில் நான் மாலை போடுவதற்கு, அதீத பக்தி என்பது என் காரணமில்லை என்று தெரிந்தது. அதனால் தான் எக்கச்சக்க கோபங்களும், கேள்விகளும் எழுந்து கொண்டே இருந்தது. 

பேருந்து நிலையத்தில் அவசரமாக சிறுநீர் வருகிறது, என்ன செய்வது? முன்னாடி சொன்ன பொதுக் கழிப்பிடத்துக்கு போவதா? அல்லது பேருந்து நிலையத்தில் திறந்த வெளியிலேயே அசிங்கம் செய்வதா? சிறுநீரகத்தில் கல்லு வந்தால் பிரச்சனையில்லை, ஐயப்பனுக்காக இதைக் கூடவா பொறுத்துக்க மாட்டேன், என்று அடக்கிக்கொள்வதா?! புது செருப்பாக வாங்கி போட்டுக் கொண்டு மாலை போடலாமே, என்னை மாதிரி ஒரு ஆசாமி மாலை போடுவதே ஒரு தவறான முடிவா?! கடவுளை ஆத்மார்த்தமாக நினைத்து, தீவிரமாக விரதத்தை கடைபிடிக்கும், பக்தர்களின் உணர்வுகளை கேலி செய்வதற்காகத் தான் நான் மாலை போட்டேனா?! இம்மாதிரியான கேள்விகளோடு தான், நான் 'ஹரிவராசனம் விஸ்வமோகனம்' என்று  நாற்பது நாட்களுக்கு மேலாக கடந்து வந்தேன். இப்போது மலை ஏறப் போகிறோம். 

கங்கை நதிப் போல் புண்ணிய நதியாம் பம்பையில் நீராடி! 'புண்ணிய நதி' என்று எதாவது நதியை நாம் சொல்லிவிட்டோம் என்றாலே அந்நதிகள் பாவம் என்று பம்பையைப் பார்த்ததும் மீண்டுமொருமுறை உறுதி செய்து கொண்டேன். முதல் முறை மாலை போட்டு வரும் கன்னி சாமி ஒரு துண்டையும், வேட்டியையும் அந்தப் புண்ணிய நதியில் விட்டு வர வேண்டும். அப்படி விடப்பட்ட துணிகளின் குப்பைகள், பூஜை, பரிகாரமென்று மேலும் கழிவுகள் என நதியின் தன்மையையே, பம்பை இழந்து, சென்னையில் ஏதோ பெருமலையின் போது தேங்கிய நீர் போல் தான் எனக்குத் தோன்றியது. மன்னிக்கவும் கனவான்களே, இதை இப்படிச் சொன்னால் பக்தர்கள் புண்படுவார்களே என்ற அச்சத்தோடும், தயக்கத்தோடும் தான் சொல்கிறேன். அதில் முங்கி எழுந்த பிறகு சுத்தமான நீர் எதாவது கிடைத்தால் சரியாக குளிக்க வேண்டும் என்ற உணர்வு உண்மையாக இருந்தது. சரி அடுத்து ஏறுவோம் என்று என்னை அழைத்து வந்த கூட்டத்துடன் சேர்ந்து ஏறினேன். 

'டோலி' என்பதை அப்போது தான் கேள்விப்பட்டேன். கடவுள் என்றால் மனசாட்சிக்கு அஞ்சுவது, அது உருத்தாத வகையில் நடப்பது, என்று ஒரு சின்ன வரையறையை எனக்காக நான் வைத்திருந்தேன். அதைக் கேள்விக்குறியாக்கி என்னைக் கடந்து மலை ஏறியது டோலி! நம்முடலை தூக்கி ஏறுவதற்ககே, நமக்கு நாக்குத் தள்ளும் சபரி மலையில், சாவுகாசமாக நாற்காலியில் அமர்ந்து கொண்டு, பச்சை திராட்சையை சாப்பிட்டுக் கொண்டு, மாடுகளைப் போல் நான்கு பேர் நாற்காலியை வேர்க்க விறுவிறுக்க சுமந்து செல்ல, கருப்புத் துண்டால் தலையை வெய்யிலில் இருந்து மூடிக் கொண்டு, மெல்ல கொட்டாவி விட்டுக் கொண்டே மேலே செல்கிறார்கள் சிலர். எனக்கு வியப்பு! தான், மலை ஏற நாயை விட மோசமாக நான்கு பேர் இப்படி கடினப்பட வேண்டுமா? சரி கால் வலியாக இருக்கலாம், வயதாகி போயிருக்கலாம், அதற்காக அப்படிப் போய் ஐயப்பனை பார்க்க வேண்டுமா? என் நண்பனின் அப்பா தான் குரு சாமி, அவரின் தலைமையில் தான் முதல் முறையாக நான் மலை ஏறுகிறேன். என் நண்பனிடம் இந்த டோலியைப் பற்றி அதை சுமக்கும் அந்த நான்கு பெயரைப் பற்றி பாவப்பட்டேன். என் நண்பன் "சும்மாவா செய்யுறாங்க... இதுக்கு நல்ல காசு... இதுனால அவுங்களுக்கு ஒரு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்குதுல" என்றதும் என்னால் அவனிடம் மேலும் தொடர முடியவில்லை. மேலும் நான்கைந்து டோலிகள் நான் பாவமாக பரிதாபப்பட என்னைக் கடந்தன. அதில் நாற்காலியில் அமர்ந்திருந்தவர்களில் பெரிய மாற்றமில்லை. சிலர் பச்சை திராட்சை, சிலர் கமலா ஆரஞ்சு, சிலர் கையில் அலைபேசியில் ஐயப்பன் பாடல் கேட்டுக் கொண்டு கடந்தார்கள். 

நான் எதிர் பார்த்திராத கூட்டம். ஒரு மணி நேரத்திற்கு ஒரு அடி என்பது போல் கூட்டம் நகர்கிறது. 'மனுச கடலாட்ட இருக்குல' என்று கூட்டத்தில் ஒருவர் சொல்கிறார். ஐந்து மணி நேரமாக ஒரு இருபதடி நடந்திருப்போம். நான் வெறுத்துக் கொண்டிருக்கிறேன். ஒருவர் அவர் இஷ்டத்துக்கு உள்ளே நுழைகிறார். மற்றும் சிலர் தனி வரிசையை உருவாக்குகின்றனர். என்னமோ நாங்கள் நிற்பது போலியான வரிசை போல அவர்கள் எங்களைப் பார்க்கிறார்கள். வரிசையெல்லம் கலைந்து நெருக்கலானது. முன்னாடி இருப்பவரின் முதுகில், என் மூக்குரசும் வகையில் நெருக்கம் அதிகமானது. நான்கு வயது குழந்தையை எல்லாம் மாலை போட்டு, சிலர் தோளில் வைத்து கூட்டி வந்திருக்கிறார்கள். வயதானவர்கள் பலர் கூட்டத்தில். ஏன் இவ்வளவு தாமதம் என்று விசாரித்தால் ஐயப்பனுக்கு அபிசேகம் நடந்து கொண்டிருக்கிறது. அதனால் நடையை சாத்தியிருக்கிறார்கள். அபிசேகம் முடிந்து அலங்காரம் செய்து தான் திறப்பார்கள் என்றார்கள். 

நெருக்கம் அதிகமானது, திறந்தால் எந்த வரிசை முதலில் செல்வது? வாக்குவாதம் வந்தது. என் பக்கதில் இருந்த இருவருக்குள் ஏதோ நெருக்கல் தொடர்பாக சண்டை எழுந்தது. அடித்துக் கொள்கிறார்கள். அவர்களை இன்னொருவர், நாற்பதைக் கடந்தவர் "சாமி... சாமி... என்ன சாமி... அட விடுங்க சாமி" "அட... மணி கண்டன பாக்க வந்துட்டு, அவனோட மலையிலேயே என்ன சாமி!? இப்படி போய் அடிச்சுக்குறீங்க... பொறுமையா நின்னு பாப்போம்" என்று தடுக்க முயல, சண்டைக் கட்டிக் கொண்டிருந்த ஒருவர் தெரியாமல் தடுக்க வந்தவரது மாலையை இழுக்க, அது அறுந்தது. சட்டென அவரும் சண்டையில் அடிக்க ஆரம்பித்துவிட்டார். அங்கு காவலர்கள் வந்து சமாதானம் செய்ய வேண்டியதாய் ஆகிற்று.

இன்னும் ஐயப்பனுக்கு பூஜை முடியவில்லை. இங்கு நான்கு வயது குழந்தை ஒன்று மயக்கம் போட்டுவிட்டதாக பதறி அழுதபடி குழந்தையின் அப்பா, காவலரிடம் கூட்டத்தை விலக்கி வருகிறார். முதலுதவி செய்யும் கூடம் தூரத்தில் எங்கோ இருக்கிறது. அங்கு எடுத்துக் கொண்டு ஓடச்சொல்லி காவலர் வழி காட்டுகிறார். இந்த சலசலப்பை அந்தக் கூட்டத்தால் ஒரு, ஒரு நிமிடத்திற்கு மேல் கொண்டு செல்ல முடியவில்லை. அவர்களின் மனமெங்கும் திரு ஐயப்பனை காண வேண்டுமென்ற ஆவல் தான் நிறைந்திருக்கிறது. 

"இந்தக் காட்டு வழில போயி நடந்து குதிச்சா, காசு கட்டி போற ஸ்பெஷல் தரிசன வழிய புடிச்சிரலாம்" எங்களுடன் வந்திருந்த ஒருவர், வழி காட்ட எங்களுடன் வந்த குழு அதில் குதித்தார்கள். 'ஐயோ இது இறைவனை பார்ப்பதற்கான குறுக்கு வழியே!' என்று எனக்குத் தோன்றினாலும், என் கால் வலி அதனை மிஞ்சிவிடுகிறது. நானும் அவர்களுடன் குதிக்க, பின்னாடி கூட்டம் கூட்டமாக அதில் குதிக்கிறார்கள். காவலர்கள் கூட்டத்தை விரட்ட தடியை ஓங்கிப் போராடியவர்கள், கட்டுப்படுத்த முடியாமல் அடிக்கவும் ஆரம்பித்துவிட்டார்கள். மலையாளத்தில் 'ஜல்லிக்கட்டு' என்ற ஒரு படம் பார்த்திருக்கிறீர்களா? அதில் ஒரு எருமையால், அந்த கிராமமே மிருகமாக மாறுமல்லவா, அது போல சபரி மலையே, பதினெட்டுப் படி ஏறி ஐயப்பனை பார்க்க வேண்டிய வெறியில் மிருகமாக மாறிக்கிடந்தது. எதையெல்லாம் செய்ய முடியுமோ அதை செய், என்னவெல்லாம் சொல்ல முடியுமோ அதை சொல், ஆனால் உடனே ஐயப்பனை பார்த்தாக வேண்டும். 

இருந்தும் "சாமிகளா! மணிகண்டனுக்காக இத்தன நாள் விரதம் இருந்துட்டோம், என்ன சாமி... இன்னும் இரண்டு நாள் ஆனாத் தான் என்ன?, பொறுமையா அவன கண்ணாற பாக்கலாமே... எதுக்கு சாமி இத்தன மோதல்லு!" என்று கூட்டத்தின் தல்லுமல்லுவிலும் ஈரத்தோடு ஒரு சத்தம் கேட்டது. அச்சத்ததுக்கு சொந்தக்காரரை அக்கூட்டத்துக்குள் கண்டு பிடிக்க முடியவில்லை. சபரி மலையில் செம்பட்டை தலையுடனிருந்த கருங்குரங்குகள் "யார் இவர்கள்? எதற்காக இப்படியான வெறி?" என்பது போல் கிளையிலிருந்து பார்ப்பதாக எனக்குத் தோன்றியது.

ஒருவழியாக மலைப் பாதையைக் கடந்து கம்பியில் செல்லும் வரிசையை நாங்கள் அடைந்துவிட்டோம். இப்படிப் போய் அந்த இறைவனைப் பார்க்க வேண்டுமா?! என்று எனக்கு உறுத்திக் கொண்டிருக்கிறது. தீவிர பக்தியில் ஐயப்பனை எப்படியாவது சீக்கிரம் பார்த்தாக வேண்டும் என்ற உறுதியிலிருந்த என் நண்பனிடம், எனக்கு ஆரம்பத்தில் தோன்றிய எல்லா கேள்விகளையும் கேட்டுக் கொண்டிருக்கிறேன். ஒரு கட்டத்துக்குக்கு மேல் பொறுமை தாங்க முடியாமல், என் நண்பன் "நச நசனு கேள்வி கேக்காம இருடா... அப்பறம் என்ன மயித்துக்குடா மால போட்ட... ச்சை... சாமி சரணம்" "அமைதியா இருடா... பூஜை முடிஞ்சிரும், நடைய இப்ப துறந்திருவாங்க... சாமிய பாத்திரலாம்" ஒரு வழியாக பூஜை முடிந்து ஐயப்பன் நடை திறந்தது.

பதினெட்டுப்படி நான் ஏறவில்லை. பதினெட்டுப்படியும் தூக்கி வீசபட்டு, ஐயப்பன் சிலை முன் நின்றேன். தோராயமாக ஒரு இருபது நொடிகள் இருக்கலாம். அங்கிருந்து அகற்றப்பட்டேன். அந்த இருபது நொடிக்குள் அந்த கூட்டத்திற்குள் ஐயப்பனைக் கூட ஒருநிலைப்படுத்தி என் மனதில் நினைக்க முடியவில்லை. 

கூட்டத்தில் சிதறியவர்கள் அங்கிருந்த நம்பியார் மண்டபத்தின் முன் ஒன்று சேர்ந்தோம். முன்பு இருந்த சந்தேகம் எனக்கு மீண்டும் வந்தது. 'கடவுள் நம்பிக்கை நமக்கு இருக்கிறதா? இல்லையா?' தேங்காயை உடைத்தார்கள், அதில் உறைந்திருந்த நெய்யை பாத்திரத்தில் போட்டு ஐயப்பனின் வழிபாட்டிற்கு கொண்டு சென்றார்கள். 

அந்தியில் மலை ஏறினோம். இரவு சபரி மலையிலேயே கழிந்தது. காலை பத்து மணி வாக்கில் கீழே இறங்க ஆரம்பித்தோம். ஒரு பாட்டி மெதுவாக கீழே இறங்கிக் கொண்டிருந்தார். முகத்தில் ஒரே உற்சாகம். நான் இங்கிருந்து இறங்கினால் போதுமென்று மேலிருந்து வேகமாக இறங்கிக் கொண்டிருந்தேன். என்னோடு வந்தவர்கள், எனக்கு பின்னாடி தூரத்தில் இப்படியான கூட்டத்தைப் பற்றி, பெருமையாக பேசிக் கொண்டு, மெல்ல நடந்து வந்தார்கள். கடக்கும் போது இந்தப் பாட்டியைப் பார்த்து புண்ணகைத்தேன். பாட்டி பதிலுக்கு புண்ணகைத்து மூச்சு வாங்கிக் கொண்டே "மணி என்ன சாமி?" என்றதும் "பத்தே முக்கால்" என்றேன். "இந்தக் கூட்டத்தில ஏறி இறங்கீட்டீங்களா?!!" பாட்டி கண்ணை மேலே தூக்கி பெருமையாக "ம்ம்" என்றார். "ஐயப்பன் மேல எப்படி இவ்வளவு பக்தி?" என்றேன். "சின்ன வயசில இருந்து எங்க அப்பாரு வருவாரு, அப்புறம் எங்க அய்யா வருவாரு... எங்க அய்யா, எனக்கு ஆறு வயசில இங்க கூட்டீட்டு வந்தது சாமி... அடுத்து போலம்னா முடீல... அப்புறம் எனக்கு அம்பது தொட்டப்பவே... டைம் ஆகுறதுலாம் நின்னு போச்சு... எங்க வீட்டுக்காரரு என்ன விடவே இல்ல... போன வருசம், இன்ன தேதிக்குத் தான், அந்த மனுச காலமானாரு... உடனே இந்த வருசம் போகனும்னு தோனி எங்க ஊருக்காரங்களோட வந்துட்டேன்..." டோலியின் மீது அந்தப் பாட்டிக்கும் வெறுப்பு இருந்தது, அதைப் பகிர்ந்தார், என்னவானாலும் ஐயப்பன் மீது அந்தப் பாட்டிக்கு தீராத பக்தி இருப்பதைப் பார்த்து ஆச்சர்யப்பட்டேன். எனக்கு, இந்தப் பாட்டிக்கு மாறாக, இப்படியான வழிபாட்டின் மீது அவநம்பிக்கை தான் இங்கு வந்ததில் அதிகமாகியிருந்தது. பாட்டி வந்திருந்த குழு, பாட்டிக்காக ஒரு இடத்தில் காத்திருந்தார்கள். பாட்டி அவர்களோடு இணைய, நான் கீழே இறங்கினேன். இன்னும் வேகமாக. 

நாங்கள் வந்திருந்த வாகனத்தை அடைந்தேன். ஓட்டுனர் உள்ளே படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அதில் ஏறி நானும் படுத்தேன். என்னுடன் வந்தவர்களும் வந்து சேர்ந்தார்கள். அடுத்து எங்கே என்றதும், குரு சாமி குற்றாளத்திற்கு என்றார். இறுதியாக எனக்கு உற்சாகம் வந்தது. குற்றாலீஸ்வரர் கோவில் அழகாக இருந்தது. அருவியில் குளிக்க வேண்டும் என்ற ஆர்வம் தொற்றிக் கொண்டது. தேங்காய் எண்ணெய்யில் பொறித்தெடுத்த நேந்தரம் சிப்ஸ், வழி நெடுக என்னை கட்டி இழுத்தது. அத்தனை இரம்மியமான மஞ்சள் நிறத்தில் அது காட்சியளித்தது. அருவிக்கு செல்லும் வழியில் பல நிறங்களில் அல்வா கடைகளும் மலிந்திருந்தன. 

அருவியில் நன்றாகவே நீர் கொட்டிக் கொண்டிருந்தது. அருவியின் வலது புறத்தில் பெண்களுக்கும், இடது புறத்தில் ஆண்களுக்கும் என கட்டை கட்டி பிரித்திருந்தார்கள். சட்டையைக் கூட கலட்டாமல் அருவியில் என் பாதத்தை நீட்டி குளித்தேன். எனக்கு பதினெட்டு படி கடந்து பார்த்த போது இல்லாத நிம்மதியை அருவி கொடுத்தது. எனக்கு வலது புறத்தில், குறுக்கே உள்ள கட்டைக்கு அடுத்து, நான் மலையில் கண்ட அந்தப் பாட்டி!. என்னை அவர் பார்க்கவில்லை. பாட்டியும் உற்சாகமாக குளிக்க ஒரு குழந்தையைப் போல் அத்தனை ஆர்வத்துடன் தயாராகிக் கொண்டிருந்தார். தங்கத் தோடு வாங்கினால் கொடுப்பார்களே அந்த மாதிரி சிறிய மணிப்பர்ஸை, தனது ஜாக்கெட்டுக்குள்ளாக இருந்து வெளியில் எடுத்து பக்கத்தில் உள்ள திட்டு மீது வைத்து, பாவாடையைத் தூக்கி மார்பகத்திற்கு மேல் கட்டினார். 

சாரலே அவரை நனைத்துவிடும் போல. பாட்டியின் சுருட்டையான நரைத்த முடிகள் காற்றில் ஆடிக் கொண்டிருந்தது. அதனை ஒதுக்கிக் கொண்டு பாவாடையை நன்றாக கட்டிக் கொண்டிருந்தார். "பாட்டீ!! குரங்கு" என பக்கத்தில் உள்ள ஒரு பெண் பாட்டியைப் பார்த்து கத்த, பாட்டி திரும்புவதற்குள், குரங்கு பாட்டியின் அந்த மணிப்பர்ஸை தூக்கிக் கொண்டு மலையின் மீது ஏறிவிட்டது. "ஐயோ... ஐயோ! ஐயப்பா" என்று குரங்கைப் பார்த்து கத்த, அது மலையின் நடுவில், ஒரு திட்டில் அமர்ந்து கொண்டு பர்ஸை திறக்கப் பார்க்கிறது. பாட்டி கதறுகிறார். 

கூட்டம் "ஏய்... தூய்..." என்று விரட்டுகிறார்கள். "ஏய் விரட்டாதீங்கப்பா... இன்னும் உச்சிக்கு போயிறப்போவுது" என்றார் ஆண்கள் கூட்டத்தில் ஒருவர். "பாட்டீம்மா... அது எதோ திங்கிற பொருளுனு தூக்கீட்டு போயிருக்கு... அதுல திங்கிறதுக்கு எதுவும் இல்லைனு தெரிஞ்சா, அதுவே கீழ போட்டிரும்... பயப்படாதீங்க" என்றார் இன்னொருவர். பாட்டிக்கு லேசாக கண்ணில் நீர் வந்து கொண்டிருந்தது. "பாட்டி! அவர் கிட்ட போய் சொல்லுங்க" என்று அருவியின் ஓரத்தில், அலுவலகத்தில் இருந்த வனக்காவலரிடம் போகச் சொன்னேன். 

அப்போது குரங்கு பர்ஸை வாயில் கடித்து பியித்துவிட்டது. உள்ளே இருந்த பணத்தை எடுத்தது. அது வேறு எதையோ தேடுகிறது. நூறு, ஐந்நூறு ரூபாய் நோட்டுகளை தூக்கி வீசியது. அருவியின் நீரிலும் பணம் கொட்டுகிறது, காற்றிலும் பறக்கிறது. பாட்டி அதைப் பார்த்து கதறி அழுக ஆரம்பித்துவிட்டது. குளிப்பவர்கள் குதித்து குதித்து பணத்தை பிடிக்கிறார்கள். என் பணம் இப்படி கொட்டுவதாக யோசித்துப் பார்த்தேன்! பதறியது.

மார்பகம் வரை கட்டிய பாவாடையோடே பாட்டி வனக்காவலரிடம் சென்று அழுதது. வனக்காவலர் வருவதற்குள், மக்கள் யாவரும் குதிப்பதைப் பார்த்த குரங்கு, மலையின் உச்சிக்கு சென்று, இன்னும் பர்ஸை அதிகமாக நோண்டுகிறது. "அதுல தான் என்னோட தாலிக் கொடி இருக்குது சாமி... அதைய எப்படியாவது அந்த ஜீவங்கிட்ட இருந்து வாங்கித் தந்திரு சாமீ..." என்று பாட்டி சத்தமாகவே அழுதது. வனக்காவலரும் வந்து பார்த்துவிட்டு "அந்த ஹைட்டுல யாரும் போனதில்ல ஆச்சி... அங்க போறது ரொம்ப கஸ்டம்… அப்படியே நாம அங்கு போனாலும்... அது ஓடீரும் ஆச்சி"  என்று அவரும் ஒரு பதட்டத்தோடே சொன்னார். 

சொல்லிக் கொண்டிருக்கும் போதே, குரங்கு அந்தப் பர்ஸோடு தாவி ஓடியது. பர்ஸ் நீரில் அடித்து வரலாம் என்று பார்த்தோம், பத்து நிமிடமாக குரங்கு அங்கு வரவதற்கான அறிகுறிகளே தெரியவில்லை. எனக்கு அவ்வளவு வயதான ஒருவர் அப்படி அழுவது மிகவும் கனமாக இருந்தது. பாட்டி கூட்டத்தை விலக்கி, அருவியிலிருந்து எங்கோ வேகமாக அழுது கொண்டே நடந்து சென்றார். அதற்கு பிறகு நானும், என்னுடன் வந்தவர்களும் எங்கள் வாகனம் நோக்கி நடந்தோம். "வீட்டுக்கு சிப்ஸ் வாங்குறவங்க இங்கேயே வாங்கிக்கோங்கப்பா... இங்கதா வில கம்மியா இருக்கும்" என்று என் நண்பனின் அப்பா, குரு சாமி சொன்னார். 

நான் வெறுப்பின் உச்சத்திலிருந்தேன்.  ஐயப்பனை தான் அத்தனை ஆசையாக பார்க்க வந்தது பாட்டி, இப்ப என்ன ஆயிற்று! இவர்கள் இப்படி வணங்குகிறார்களே, இதைத் தான் கடவுள் விரும்புகிறாரா?! இந்த எண்ணங்களோடு எங்கள் வாகனம் நோக்கி நடந்து வந்த போது, அங்கிருந்த ஒரு சிற்றுந்துவின் வலது புறத்தில், பெரிதாக ஐயப்பன் படம் வரையப் பட்டிருந்தது. பாட்டி அங்கேயே அமர்ந்து ஐயப்பன் படத்தைப் பார்த்து பாவாடையோடு அழுது கொண்டிருந்தார். பாட்டியோடு உடன் வந்தவர்கள், பாட்டியை சமாதானம் செய்து கொண்டிருந்தார்கள். 

-சா.கவியரசன்

13-01-2024





Comments

Popular posts from this blog

அந்த ஆங்கில வார்த்தை

நகுவா நயனா (சிறுகதை)

87 - 38A (சிறுகதை)