கழுகு மலை - வெட்டுவான் கோவில்

 


 கழுகு மலை - கரிசல் மண் - வேட்டுவான் கோவில்


கழுகு மலை, சமீபத்தில் தான் கோபல்ல கிராமம் படித்திருந்தேன், அக்கையா, காயடி கொண்டைய்யா, கோவிந்தப்ப நாயக்கர் என அத்தனை கதாபாத்திரங்களும் சூழ்ந்து கொண்டு "எப்போது பார்த்தாலும் பசுமை கண்ணை கவ்வுகிறது, காதைக் கவ்வுகிறது என்று கூறிக்கொண்டே இருக்கிறாயே, இங்கே பார் கண்ணுக்கெட்டிய தூரம் வரை கருமை, இந்த அழகு உன்னை கவரவில்லையா?!" என்று கேட்பது போல் தோன்றியது! பூமிக்கு இட்ட காஜல் போல் கரிசல் மண் அத்தனை கவர்ச்சியாக இருந்தது. 

கோவில்பட்டியிலிருந்து கழுகு மலைக்குப் பேருந்தில் சென்றோம். ரண்டி, ஏமி, நிதர போயி என தெலுங்கு என்னை தழுவிக் கொண்டு கடந்தது. வெளியில் பேணர்களில் கடம்பூர் ராஜுவும் அவரின் மகன் அருண்குமாரும் ஒரு சேர ஏர் நெற்றியுடன் பெரிய முகங்களோடு சிரித்துக் கொண்டிருந்தார்கள். பெரும்பாலும் குகைக் கோவில், புடைப்புச் சிற்பங்கள் என்றால் பல்லவர்கள் நினைவு வரும், ஆனால் கிட்டத்தட்ட அதே காலக்கட்டத்தில் பாண்டியர்களால் உருவாக்கப்பட்ட தென் தமிழ் நாட்டு கலைப்படைப்புகளும் நம்மை கட்டாயம் ஆச்சர்யப்படுத்தும். 



குன்றக்குடி குடைவரை கோவிலில் பாண்டியர்களின்  கலை வேலைப்பாடு வியக்க வைக்கும். பெரும்பாலும் பிள்ளையார்பட்டி வலம்புரி விநாயகரையும், குன்றக்குடி முருகரையும் வேக வேகமாக வழிபட்டுவிட்டு கடப்பவர்களைத் தான் அங்கு நான் கண்டேன். அதிசயிக்க வைக்கும் குடைவரைக் கோவில் மற்றும் சிற்பங்கள் குன்றகுடி அடிவாரத்தில் இருப்பதை மக்களும் கண்டுகொள்ளவில்லை, அரசும் 1400 வருடம் பழமையான அதனை பிரபலபடுத்துவதற்கான முயற்சியிலும் இறங்கவில்லை. அதே போல தான் கழுகு மலை பாண்டியர்களின் சிற்பங்களும்! 1300 வருடம் பழமையானது! சமணர்கள் பள்ளி கொண்டதாலேயே இத்தனை சிற்ப வேலைப்பாடுகள் இங்கு. திகம்பரக் குழுவைச் சேர்ந்த சமணர்களின் சிற்பங்கள் இங்கு இருப்பவை. தென்னகத்தின் எல்லோரா என்னுமளவு சிறப்பு வாய்ந்தது இச்சிற்பங்கள். 

திகம்பர சமணக் குழுவில் பெண் துறவிகளுக்கான சிலைகள் அரிதாகவே இருக்கிறது. அதில் முக்கியமான இடம் கழுகு மலை! சமணத்தில் இரண்டு பெரும் பிரிவுகள் உருவானது சுவாரஸ்யமான வரலாறு. ஒன்று திகம்பரர்கள், மற்றொன்று ஸ்வேதேம்பரர்கள். அசோகரின் தாத்தா சந்திர குப்த மௌரியர் தன்னுடைய கடைசி காலத்தில் சமணத்தைத் தழுவி துறவு பூண்டு பத்ரபாகு தலைமையில் வடக்கிலிருந்து கர்நாடகவின் சரவண வெள்ளைக்குளம் (ஸ்ரவெனபெலகுளா) வந்தடைந்தார்கள். அவர்கள் பழைய சமண மரபான நிர்வாண நிலையையே கடைபிடித்தார்கள். அதுவே வடக்கிலேயே இருந்த சமணக் குழு, நெறிமுறையில் திருத்தம் செய்து நிர்வாணத்திலிருந்து வெள்ளை ஆடைக்கு மாறினார்கள். வடக்கு குழுவிற்கு ஸ்வேதேம்பரர்கள் என்று பெயர், அதற்கு தலைமை தாங்கி சென்றவர் ஸ்தூலபாகு. தேர்வுக்காக இதனை நினைவு வைத்துக் கொள்ள Svetambara-Stulabagu இரண்டிலும் 'S’ வருகிறதை clue-வாக நினைவில் வைத்துக் கொள்வேன். இருந்தும் South சென்ற திகம்பரர்கள், இதில் South-இல் வரும் 'S’ ஓடு குழப்பிக்கொள்வேன். ஆனால் இதனை UPSC தேர்வில் நான் எழுதும் போது கேட்டதே இல்லை. தெற்கில் சந்திரகுப்த மௌரியரால் பரவியதே திகம்பர சமணம். அதன் பொருட்டே கழுகு மலை சிற்பங்களும் திகம்பர பிரிவாக உள்ளது. 

இங்குள்ள வெட்டுவான் கோவில் இன்னும் சிறப்புபெற்றது. எல்லோராவில் உள்ள கைலாச கோவிலோடு இதனை ஒப்பிடுகிறார்கள். இங்குள்ள தக்சிணாமூர்த்தி சிலை எங்குமில்லாமல் மிருதங்கம் வாசிப்பது போல் அமைக்கப்பட்டிருக்கிறதாம். ஏனைய இடங்களில் தக்சிணாமூர்த்தி வீணையையே மீட்டிக் கொண்டிருப்பார். ஒரே பாறையில் செதுக்கப்பட்டது இதன் மற்றொரு சிறப்பு. நான் செல்கிற போது இது அடைக்கப்பட்டுவிட்டது. கழுகு மலையின் மேலிருந்து தான் பார்க்க முடிந்தது. 

கு.அழகிரிசாமி, கி.ராஜநாராயணன், சோ.தர்மன், பூமணி, எஸ்.ரா என நீளும் கரிசல் இலக்கியம், கருப்பட்டி, கடலை மிட்டாய், செங்கோட்டை கணவாய் காரணமாக காற்றாலைகள் ஆக கை அசைக்கிறது கோவில்பட்டி. 


-சா.கவியரசன்.

10.09.2023

Comments

Popular posts from this blog

அந்த ஆங்கில வார்த்தை

நகுவா நயனா (சிறுகதை)

87 - 38A (சிறுகதை)