மதுரையும் மதுரை நிமித்தமும்

 


மதுரையும் மதுரை நிமித்தமும்


முன்பு ஒரு முறை நா.முத்துக்குமாரின் வரிகளை கட்டுரையில் பயன்படுத்தியிருக்கிறேன், அதை மீண்டும் ஒருமுறை பலமாக உணர்ந்தேன். "பயணம் செய்வதற்கு போதுமான பணமும், பயணம் செய்வதற்கான மனநிலையும் உள்ளது தான் உலகிலேயே மிகப் பெரிய சொத்து!" வீட்டில் அப்பா அம்மாவுக்கு மருத்துவப் பிரச்சனைகள், அலுவலகப் பணி, சரியான திட்டமில்லாமல் குறும்படம் எடுப்பதாக இறங்கி சிக்கிக்கொண்ட கடன் என இவற்றை எல்லாம் ஓரம் கட்டி முடிக்கும் போது தேர்தல் நேரப் பணி... அப்படி இப்படியென்று ஒரு வழியாக பயணத்திற்கான மனநிலையும் சூழலும் அமைந்தது. இயேசு நாதர் மூன்றாம் நாளே உயிர்த்தெழுந்துவிட்டார், அவர் மட்டும் நான்காம் நாள் உயிர்த்தெழுந்திருந்தால், நான்கு நாட்கள் விடுமுறை கிடைத்திருக்குமே! இப்போது மூன்று நாள் தான் விடுமுறை. சரி எங்கே செல்லலாம்? ஒடிசா! மூன்று நாட்களில் சென்று வரமுடியுமா என்று சங்கடமே படாமல் IRCTC-யில் இரயில் பயணம் நேரம் பார்த்துவிட்டு, சரி தமிழ்நாட்டிற்குள் எங்கு செல்லலாம்?, மதுரை. மீனாட்சி அம்மன், நாயக்கர் மகால், காந்தி அருங்காட்சியகம் இல்லாமல் வேறு எங்காவது போக வேண்டும் என முடிவு செய்தேன். குறிப்பாக தனியாக செல்ல வேண்டும். 


தனியா போறதுக்கு போர் அடிக்காதா?! தனியா சாப்பிடுறதுக்கு ஒரு மாதிரி இருக்காதா? என்ற கேள்வி நான் தனியாக ஹம்பி, தார்வாட், புனே, மும்பை சென்ற போதே சிலர் என்னிடம் கேட்டார்கள். கூட்டமாக செல்வது பிடிக்கும், ஆனால் அதைவிட எனக்கு தனியாக செல்வது ரொம்பப் பிடிக்கும். தனியாக செல்லும் போது பிடித்த இடத்தில் இறங்கலாம், பிடித்த இடத்தில் பயணத்தில் ஏறிக்கொள்ளலாம், பிடித்ததை சாப்பிடலாம், பிடிக்கும் நேரத்தில் சாப்பிடலாம், பிடித்த பாடலை இடையூறு இல்லாமல் கேட்கலாம், பிடித்ததை பிடித்த நேரத்தில் படிக்கலாம், இப்படி பிடித்த முடிவுகளை சுதந்திரமாக எடுக்கலாம், இரயில் வர தாமதமானால் இரயில் நிலையத்திலேயே தூங்கலாம், பேருந்தில் செல்லலாம், தோன்றினால் நடக்க முடியுமளவு நடந்து செல்லலாம், கால் வலித்தால் லிப்ட் கேட்டு செல்லலாம், செல்ல தோன்றவில்லையா அங்கேயே நல்ல இடமாக அமர்ந்து மக்களை வேடிக்கை பார்க்கலாம், சத்தமாக பாட்டுப் பாடலாம், பக்கத்தில் கிணறு எங்கே இருக்கிறது என்று கேட்டுப்போய் குளித்து வரலாம், பயணம் போதுமென்று தோன்றுகிறதா? அந்த இடத்திலேயே முடித்துக் கொண்டு, வீட்டுக்குக் கிளம்பலாம். பல வித்யாசமான மனிதர்களை கவனிக்க வாய்ப்பு கிடைக்கும். அவர்களோடு உரையாட வாய்ப்பு கிடைக்கும். அவர்களின் ஊரைப் பற்றி அவர்கள் மூலம் இன்னும் அதிகமாக தெரிந்து கொள்ள நேரும். துணையாக யாராவது வந்தால் நாம் அவருடன் மட்டுமே தான் பேசிக் கொண்டு இருப்போம். இன்னும் மோசமாக, துணையாக வந்தவர் அவரின் காதல் கதை, அல்லது வீட்டு பிரச்சனை, அலுவலகப் பிரச்சனையை ஆரம்பித்துவிட்டால் என் மூளையின் நரம்புகள் என்னை கெட்ட வார்த்தைகளில் திட்டுவதைத் தவிர வேறு எதுவும் செய்யாது. 


இன்னும் கூட்டாக செல்லும் போது இரண்டு மிகப் பெரிய சிக்கல்கள் தனிப்பட்ட முறையில் எனக்கு இருக்கிறது. உதாரணமாக மும்பை செல்கிறோம் என்றால், அவர்கள் அங்கிருக்கும் சுற்றுலா தளமென்று கூகுளில் காட்டும் பத்து டிக் பாக்ஸுகள் வைத்திருக்கிறார்கள், மெரைன் ரோடு, சாருக்கான் வீடு, அம்பானி வீடு, கேட் வே ஆஃப் இந்தியா இதையெல்லாம் பார்த்து அங்கு புகைப்படம் எடுப்பது, அந்த பாக்ஸை அவர்களுடன் சேர்ந்து டிக் அடிப்பது போன்ற கடமையாகிவிடுகிறது எனக்கு. அதனால் மதுரை செல்வோம் என்றால் 'அங்கு டூரிஸ்ட் ஸ்பாட் பாக்குற மாதிரி இடங்கள் என்ன இருக்கு என்று தேடுபவர்கள்' எனக்கு உபாதையாகத் தோன்றும். தாஜ் மகாலை பார்க்கப் போகிறோம் என்றால், தாஜ் மகாலைப் போய் பார்த்து வருவது என் குறிக்கோள் அல்ல, தாஜ் மகாலுக்கு பயணம் செல்வது என் குறிக்கோள் என்பதை விளக்க எனக்கு கடினமாக இருக்கும். 


அடுத்தப் பிரச்சனை எனக்கு என்னுடன் வருபவரை எங்கேஜுடாக வைத்திருக்க வேண்டுமே என்ற எண்ணம், அதாவது இந்தப் பயணம் என்னுடன் அவருக்கு சிறப்பாக அமைய வேண்டுமே என்ற எண்ணம் உள்ளுக்குள் உரசிக் கொண்டே இருக்கும். அது என் சுதந்திர உற்சாகத்தை கொஞ்சம் குறைப்பதாக உணர்வேன். எனக்கு வியப்பாக இருக்கும் சரக்கொன்றை மரம், எனக்கு வியப்பாக இருக்கும் குக்குறுவான் பறவையை உடன் வருபவர்களுக்கு உற்சாகம் தாங்காமல் காட்டப் போயி அதன் கதைகளைப் பற்றி சொல்லிக் கொண்டிருக்கும் போது, உடன் வந்தவர் இடை மறித்து "நல்லா தூங்கனும் இன்னைக்கு நைட்டு, இங்க எங்க ரூம் புக் பன்றது?!" என்று கேட்டால் நான் பாவமாவேன். 


கோயம்புத்தூரிலிருந்து திண்டுக்கல், திண்டுக்கல்லிலிருந்து சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரிக்கு பேருந்தில் சென்றேன். நடுநிசி மணி ஒன்றாகிவிட்டது. ஹெட்செட் மாட்டிக் கொண்டு அந்த இரவில் ஒரு இருபது வயதை நெருங்கும் பையனும் பெண்ணும் படம் பார்த்துக் கொண்டு குசுகுசுவென பேசி சிரித்து வந்தார்கள். பாதி பேர் பேருந்து குலுங்களில் குழந்தை போல உறங்கி வந்தார்கள். நான் ஆபாவானன்-மனோஜ்-கியான் கூட்டனியில் வந்த பாடல்களை கேட்டுக் கொண்டு வந்தேன். என் பின்னால் ஒருவர் ஸ்டாலினைத் திட்டி எடப்பாடியை புகழ்ந்து கொண்டு வந்தார். பேருந்து ஒரு ஹோட்டலில் நிற்க, சிங்கம்புணரியில் அந்த நேரத்தில் எனக்காக காத்திருக்கும் சுதாகர், என் நண்பனுக்கு GRB-யின் சோன் பப்படி வாங்கினேன் (தேங்காய் ஃப்ளேவர்).  அப்போது, சோன் பப்படிக்கு ஏன் அந்த பெயர் என்ற கேள்வி தோன்றியது... கூகுளில் பார்த்த போது Indiatimes கட்டுரை ஒன்றில் மஹாராஷ்டிரா தான் இதன் உதயமாக இருக்கும் என்று தோராயாமாக எழுதியிருந்தார்கள். துருக்கியர்களின் 'பிஸ்மானியே' இனிப்பு வகையை ஒத்திருப்பதை குறிப்பிட்டிருந்தார்கள். பெர்சிய வார்த்தையான 'சோஹன் பாஸ்மக்' (Sohan Pashmak) என்பதிலிருந்து 'சோன் பப்படி' என்ற வார்த்தை வந்திருக்கலாம் என குறிப்பிட்டிருந்தார்கள். இதைப் பற்றி தேடும் போது தான் 'கன்னிப்பொண்ணு வாயில் உள்ள தேனைப் போல இனிக்கும், சோன் பப்படி சோனா பப்படி' என்ற சிவாஜி கணேசன் அவர்களின் பாடல் இருப்பதை அறிந்தேன். 'பாரேன்!!' என்பதாக அந்தப் பாடல் அப்போது எனக்குத் சிரிப்புடன் ஆச்சரியப்படுத்தியது. பயணம் முடிந்து இப்படி சோன் பப்படியைப் பற்றி என் கல்லூரி சீனியர் இராம் சுந்தர் சாரிடம் பேசிக் கொண்டிருக்கும் போது 'Big bazar நிறுவனர் ஒரு கலந்துரையாடலில் Haldiram-உடன் இணைந்து கேர்பெரி டைரி மில்குக்குப் போட்டியாக இந்தியாவின் எந்த வகை இனிப்பை பாக்கெட்டில் வைத்து சந்தைப்படுத்தலாம் என யோசித்த போது உதயமான ஐடியா தான் சோன் பப்படி எழுபது ரூபாய் பாக்கெட் வடிவில்' என்றார். அதைத் தொடர்ந்து GRB, A2B என பலரும் கலத்தில் இறங்க எனக்கு GRB favourite ஆகிப்போனது.


சுதாகருடன்


அடுத்த நாள், நான் மதுரையில் எங்கு போகப் போகிறேன் என்பது எனக்கு தெரியவே தெரியாது. நான் அப்போது அந்த இரவு, சிங்கம்புணரியில் இருப்பேன் என்பதும், முந்துன நாள் இரவு எனக்கு தெரியாது. பள்ளிக்கூடத்திற்கு வந்த பிறகு திடீரென்று மழையென விடுமுறை அறிவித்தால் வரும் குதூகலம் போல 'திடீர் பயணம்' எனக்கு நானே கொடுத்துக்கொள்ளும் சர்ப்ரைஸாக இருக்கும். 


அடுத்த நாள் அழகர் மலை சென்றேன். சிங்கம்புணரியிலிருந்து மதுரை செல்ல வேண்டிய பேருந்தில் ஏறி மேலூரில் இறங்கி அந்தப் பேருந்து நிலையத்திலிருந்து அழகர் மலை சென்றேன். மேலூர் பேருந்து நிலையம், பீகார் சென்று வந்தபோது ஏற்பட்ட வடஇந்தியா உள்கட்டமைப்பு வளர்ச்சியை நினைவூட்டியது. அந்தச் சாலையில் எங்கு பார்த்தாலும் குளங்களும் தாமரைகளும்! இத்தனை குளங்களை நான் மதுரைக்கு அருகில் எதிர்பார்க்கவில்லை. வட கிழக்கு பருவமழை இந்தப் பக்கம் அடித்து ஊத்தியது நினைவு வந்தது. 


மேலூர் பேருந்து நிலையம்


தோ.ப எழுதிய அழகர்மலை புத்தகத்தை படிக்காமல் அங்கு போனது தவறு என அங்கு போனதும் உணர்ந்தேன். வியர்க்க விறு விறுக்க, அந்த வெயிலில், சிறப்பு தரிசனம், பொது தரிசனம் என நெருக்கி வரும் கூட்டத்தில் ஏசியில் வசிக்கும் பெருமாளுக்கு ஹாயுடன் ஏசிக்காக ஒரு நன்றி கூறிவிட்டு பிரகாரத்தில் விற்றுக் கொண்டிருந்த அப்பமும், லட்டும், முறுக்கும் வாங்கினேன். அப்போது எதார்த்தமாக இராம் சுந்தர் சாரின் அப்பாவையும் அம்மாவையும் பார்த்தேன். அவர்களோடே அங்கிருந்து அவர்கள் வந்த காரில் பழமுதிர்சோலை போனேன். அவர்கள் கொண்டு வந்த வீட்டு சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டு அழகர் கோவில் விவரங்களை கூகுளில் படித்த போது கீழே, கீழக்குயில்குடி என்றிருந்தது. பேரே வித்யாசமாக இருக்கிறதென்று அங்கு போலாமே என முடிவெடுத்தேன். 


முக்கால்வாசி தூரம் காரில் அவர்களுடன் சென்று இறங்கி கீழக்குயில்குடிக்கு நடந்தேன். ஒரு கிலோமீட்டர் நடந்திருப்பேன். மதியம் ஒரு மணி வெயில் ஈ காட்ட, இன்னும் எத்தனை கிலோமீட்டர் இருக்கும் என கூகுள் மேப்பில் பார்க்கலாம் என எடுத்தால் என் வோடா ஃபோன் ஈ காட்டுகிறது. வழியில் ஸ்ப்லெண்டரில் வந்த ஒருவரை மறித்து இன்னும் எத்தனை கிலோமீட்டர் என கேட்க அவர் 'ஏறுங்க... நானே இறக்கி விடுறேன்' என்றதும் நான் ஈ காட்டினேன். 


சமண மலை "வா... கவியரசா" என்றது. மதுரையின் பிரம்மாண்ட வெயிலை அங்குள்ள ஆலமரங்கள் குடித்துத் கொண்டிருந்தன. சமீபத்திய பாண்டி ராஜ் படங்களை நினைவூட்டுவது போல் பல குடும்பங்கள் ஆலமரத்தடியில் காணக் கிடைத்தார்கள். அறுத்த நெல் வயல்கள், அதனருகில் ஆலமரங்கள், பல வண்ணங்கள் அப்பிய பளீர் நிறத்தில் முனியப்பன் கோவில், பக்கத்தில் தாமரை நிறைந்த குளம்! அக்குளத்தில் அடர் கருப்பிலும், அல்பினிசம் வெள்ளை நிறத்திலும் என் தொடையளவு மீன்கள். பக்தர்கள் பொரியைப் போடுகிறார்கள். எதோ நாம் வளர்க்கும் செல்லப்பிராணி போல் பொரியை சாப்பிட வரும் மீன்கள் கொயகொயவென நமக்கு காட்சியளிக்கிறது. அதில் அந்த வெள்ளை மீனைப் பார்த்தால் எனக்கு கிலியாக இருந்தது. குளத்தின் அந்தப் பக்கத்தில் ஒரு தாத்தா குளித்துக் கொண்டிருக்க உடனே அவரிடம் போய் "குளிக்கலாமா நானும் இங்க?!" என்றதும் "ஓ... குளிக்கலாம்" என்றதும் நிச்சயம் அங்கு பொரி கிடைத்த மீனைவிட அதிக உற்சாகமானேன். அத்தனை தாமரை நிறைந்த குளத்திற்குள் அப்போது தான் முதன் முதலில் குளிக்கிறேன். 'ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து ஆனந்தக்கும்மிகள் கொட்டுங்களே' என்ற பாடலில் கார்த்தியும் ராதாவும் இப்படி குளிக்க பார்த்தது. இப்போது நான் தாமரைக்கு நடுவில் குளிக்கிறேன். பக்கத்தில் ராதா இல்லை. அந்த தாத்தா தான் இருந்தார், அவர் டூரிஸ்ட் வேன் ஓட்டுனர் என்றும், சிறு வயதிலிருந்து இந்த குளத்தில் தான் குளிக்கிறார் என்றும் அறிமுகப்படுத்திக் கொண்டார். "அந்த வெள்ளை மீனைப் பார்த்தால் பயமாக இருக்குதே" என்றேன். "அது நம்ம கிட்ட வரும்... ஆனா ஒன்னும் பன்னாது" என்றதும், என்னை பற்றி கேட்க, திருப்பூரிலிருந்து என்ற ஒரு வார்த்தை அடுத்து கால் மணி நேரம் அவரின் திருப்பூர் கதையைப் பற்றி பேசுவதற்கு வாய்பளித்துவிட்டது. குளத்தின் உள்ளே முங்கினேன். கண்களைத் திறந்து பார்க்க பயமாகத் தான் இருந்தது. சூரியனை பார்த்து 'இந்த வெயிலைத் தாண்டி வேறு எதாவது உன்னால் செய்ய முடியுமா?!' என்று திமிராக கேட்கும் அளவுக்கு குளிர்ச்சியளித்தது குளம். ஈர துணியோடு சமண மலை ஏறினேன். அங்கே பேச்சிப்பள்ளம், செட்டிப்புடவு மேலே ஆடு உரிச்சான் பாறையில் தோராயமாக 2300 ஆண்டுகள் பழமையான தமிழி கல்வெட்டு இருந்தது. 


கீழக்குயில்குடி குளம்


பேச்சிபள்ளத்தில், புடைப்பு சிற்பங்களாக மகாவீரர், பார்சுவ நாதர், பாகுபலி சிற்பங்கள் சிறப்பாக செதுக்கப்பட்டு இருந்தது, வரலாறு இரசிக்கும் கண்களுக்கு GRB சோன் பப்படி போல இருக்கிறது (நீரிழிவு நோயாளிகள் மன்னிக்கவும்). மதுரையின் கல்லூரி பேராசிரியர் ஒருவர் மாணவிகளை அங்கு கூட்டி வந்து சிற்பங்களை விளக்கிக் கொண்டிருந்தார். நான் கேட்க எனக்கும் பிரத்யேகமாக விளக்கினார். 


நான் கழுகு மலை சமண சிற்பங்களைப் பற்றி எழுதிய போது திகம்பரர்கள், ஸ்வேதேம்பரர்கள் இரு சமண பிரிவினர்களைப் பற்றியும் அதில் சந்திர குப்த மௌரியருடன் பத்திரபாகு தலைமையில் திகம்பரர்கள் தெற்கு நோக்கி ஸ்ரவெனபெல்குலாவிற்கு வந்தடைந்தார்கள் என்பதைப் பற்றியும் எழுதியிருந்தேன். அந்த ஸ்ரவெனபெல்குலாவிற்கு வந்ததில் ஒரு குழு இந்த மலைக்கு வந்திருப்பதற்கான சான்று இங்கு இருக்கிறதாக பேராசிரியர் கூறினார். அங்குள்ள வேறு சிற்பங்களையும் அவர் தெளிவாக சமண கதைகளுடன் விளக்கினார். அந்த மலையின் இடது புறச் சரிவில் 'செட்டிப்புடவு' என்றழைக்கப்படும் மகாவீரர் சிற்பம் ஒரு குகை போன்ற வடிவத்தில் செதுக்கப்பட்டுள்ளது. அங்கு நீதி மன்றம் அந்த காலத்தில் இருந்ததற்கான அமைப்பு இன்னும் சிதலமடைந்து இருப்பதாக படித்தேன், ஆனால் என்னால் நீதி மன்றத்தை அடையாளம் காண முடியவில்லை. 


மலை உச்சிக்கி சென்றால், தமிழி கல்வெட்டு தற்கால காதலர்களின் கல்வெட்டுடன் போட்டி போட முடியாமல் தோற்றுப்போகிறது. ஆங்காங்கே பாறை இடுக்குகளில் மத்திய பிரதேசத்தின் கஜுராஹோ சிற்பங்கள் தோற்றுப் போகும் வகையில் உயிருள்ள சிற்பங்களாக இளைஞர்களும் இளைஞிகளும் என்னை பொறாமை கொள்ள கீழே விரைய வைத்தார்கள். அந்த மலை உச்சியிலிருந்து மதுரையை ஒரு முறை பாருங்களேன்! 


சமணர்களுக்கு போட்டியாக இக்கால கல்வெட்டு


இறங்கி வந்து மீண்டுமொருமுறை குளத்தில் முங்கி பேருந்து ஏறினேன் பெரியார் பேருந்து நிலையத்திற்கு. ஜி.நாகராஜனின் 'நாளை மற்றுமொரு நாளே' படித்துக் கொண்டே பேருந்து நிலையம் அடைந்தேன். கவின் என்ற என் கல்லூரி நண்பன் என்னை திருப்பரங்குன்றம் அருகில் அமைந்துள்ள மதன் என்ற நண்பனின் வீட்டிற்கு கொண்டு சேர்த்தான். ஜிகர்தண்டா, கறிகொத்து பரோட்டா, கலக்கி, ரோஸ் மில்க், கல்லூரியின் நாஸ்டால்ஜியாக்கள், குடும்ப பொறுப்புகள், திருமண கனவுகள் என இரவு மதன் வீட்டில் கழிந்தது.


வெளியங்கிரியில் ஒரு முறை ஐந்தாவது மலையில் குளிக்கும் போது மின்மினிப் பூச்சியைப் பார்த்தது. அதற்கு பிறகு திருப்பரங்குன்றம் அடிவாரத்தில் மதன் வீட்டின் மொட்ட மாடியிலிருந்து பேசிக் கொண்டிருக்கும் போது கீழே அத்தனை மின்மினிப் பூச்சிகள்! மதன் "இங்க இது நெறையா இருக்கும்டா" என்றான். மின்மினிப் பூச்சி தான், அந்த இரவில் வானத்தில் இருக்கும் நட்சத்திரத்துடன் அது போட்டி போடுகிறது! மதுரை சென்றால் திருப்பரங்குன்றம் முருகனை மட்டுமில்லை இரவு காத்திருந்தால் மின்மினிப் பூச்சியையும் அதன் சுற்று வட்டாரத்தில் தரிசித்து வரலாம். 



அடுத்த நாள் மதனின் வண்டியை எடுத்துக் கொண்டு தனியாக கீழடி போலாம் என கிளம்பினேன். காலையில் நேரமாக கிளம்பியதால் மதன் வீட்டில் சாப்பிட முடியவில்லை. மதுரையில் காலை முட்டை தோசை சாப்பிட்டுவிட்டு வைகையின் ஓரத்திலேயே செல்லும் சாலையில் கீழடி நோக்கி சென்று கொண்டிருந்தேன். வைகையைப் பார்க்க, பத்திரிகையாளர் சமஸ் அவர்கள் கூறியது நினைவு வந்தது. ஒரே நாடு ஒரு கல்வி முறை, ஒரே நாடு ஒரே பாடத்திட்டம், ஒரே நாடு ஒரே தேர்வு இவையெல்லாம் எவ்வளவு மோசமானவை. சொல்லப்போனால் தமிழ்நாட்டில் மாவட்டத்திற்கு மாவட்டம் கல்விப் பாடத்திட்டத்தில் மாவட்டத்திற்கு ஏற்ப வேறுபாடு கொண்டு வர வேண்டும். அப்போது தான் சூழல் சார்ந்த அறிவும், தன்னை உணர்தலும் மாணவர்களுக்கு அதிகரிக்கும் என சமஸ் கூறியிருந்தார். 

பரிபாடலில் 'நிறை கடல் முகந்து உராய்' எனத் தொடங்கும் ஆறாவது பாடலில் வைகையைப் பற்றி நல்லந்துவனார் விளக்கியதை இதுவரை எந்த மதுரை நண்பர்களும் எனக்கு விளக்கிக் கூறவில்லை. அவர்களுக்கே அப்பாடல் அறிமுகம் ஆகியிருக்காது என்பது தான் அதற்கான காரணம். நீலகிரியையே பூர்வீகமாகக் கொண்டவர்களுக்கு, ஜகரண்டா மரத்தின் பெயர் கூட தெரியாமல் இருப்பது போல தான் வைகையும் பரிபாடலும் மதுரை மக்களுக்கு என நினைக்கிறேன்.


சுற்றியுள்ள மரத்தையும், சுற்றியுள்ள ஆற்றையும் தெரிந்து கொண்டு என்ன செய்யப் போகிறோம்? போட்டித் தேர்வில் 'கங்கையின் கிளை நதி இவற்றில் எவை?' என்று தானே கேள்வி இருக்கிறது? பரிபாடலின் ஆறாவது பாடல் சிலபஸ்லையே இல்லையே என வினவுவது, எல்லாவற்றையும் போட்டித் தேர்வு நோக்கில், பணியின் பார்வையில், காசு பணத்தின் கண் கொண்டே சிந்திக்கும் மன நிலைக்கு நம்மை தள்ளியிருப்பதைத் தான் காட்டுகிறது.


பரிபாடலில் வைகையைப் பற்றி மதுரை மக்களுக்கு பாடத்திட்டத்தில் இருக்கும் போது, 'அப்படி பெருமை மிகு வைகையா இப்போது இப்படி குப்பை சூழ் வைகையாக இருக்கிறது!' என இலட்சத்தில் ஒருவருக்காவது படித்த பிறகு பற்று வரும். அது வைகையின் நலனுக்கு உகந்ததாகும். வைகையின் சூழலியல் மாசுபாடுகள் குறையும். இப்படி நம்மை அறிந்து நம் சூழல் அறிந்து அடித்தளத்திலிருந்து சிந்திக்கும் அறிவு தான் உலகளாவிய சிந்திப்புக்கு எளிமையாக வழிவகுக்கும். மனப்பாடம் இல்லாமல் ஒரு பிரச்சனையைப் புரிந்துகொள்ள உதவும். அதன் பிறகு, கங்கையின் கிளை நதிகளை கங்கைக்கு நேரில் சென்றே கற்றுக்கொள்ளும் உந்துதலையும், வாய்ப்பினையும் நாம் பெற்றுவிடுவோம். சரி இதோடு இதை விட்டுவிடுகிறேன். நல்லந்துவனாரின் பரிபாடலை மதுரைக்காரர்கள் மட்டுமில்லை எல்லோரும் படித்துப் பாருங்கள். வைகையையும், தலைவன் தலைவி கலவிக் கூடலையும் ஒப்புமை கொண்டு எழுதியிருப்பார்! கொஞ்சம் பெரிய பாடல் அது. அதில் ஒரு இரண்டு பத்திகளை மட்டும் இங்கே பின்வருமாறு: 

கைம்மான் எருத்தர், கலி மட மாவினர்,

நெய்ம் மாண் சிவிறியர், நீர் மணக் கோட்டினர்,

வெண் கிடை மிதவையர், நன் கிடைத் தேரினர்,      

சாரிகை மறுத்துத் தண்டா உண்டிகை

ஓர் இயவு உறுத்தர ஊர் ஊர்பு இடம் திரீஇ,

சேரி இளையர் செல அரு நிலையர்,

வலியர் அல்லோர் துறைதுறை அயர,

மெலியர் அல்லோர் விருந்து புனல் அயர,     

சாறும் சேறும் நெய்யும் மலரும்

நாறுபு நிகழும், யாறு வரலாறு.

யானைமீது சென்றனர். குதிரைமீது சென்றனர். சிவிறி கொண்டு நீரைப் பீச்சினர். கொம்புகளிலிருந்து மணநீரை வீசினர். வெண்ணிறக் கிடைக்கட்டையைத் தேராக்கிக்கொண்டு அதன்மீது ஏறி மிதந்து சென்றனர்.  வரிசையாகச் செல்லாமல் தாறுமாறாகச் சென்றனர். சிலர் தடையின்றி ஏதாவது உண்டுகொண்டிருந்தனர். [உண்டிகை] ஒரு வழியில் [இயவு] இடையூறு வரும்போது வழியை மாற்றிக்கொண்டு சென்றனர். தெருச்சேரி இளைஞர் சென்று நிலைகொள்ள முடியாமல் நீந்திக்கொண்டே இருந்தனர். வலிமையற்றவர் துறைக்கரையில் நின்று பார்த்துக்கொண்டிருந்தனர். வலிமை உடையோர் புனலில் விளையாடினர். பருகுநீர் [சாறு], பாயசவகை [சேறு], நெய், மலர் முதலானவை சிந்தி வைகை மணம் வீசியது! 

செல் யாற்றுத் தீம் புனலில் செல் மரம் போல,

வவ்வு வல்லார் புணை ஆகிய மார்பினை;     

என்னும் பனியாய் இரவெல்லாம் வைகினை;

வையை உடைந்த மடை அடைத்தக்கண்ணும்

பின்னும் மலிரும் பிசிர் போல, இன்னும்

அனற்றினை துன்பு அவிய, நீ அடைந்தக்கண்ணும்,

பனித்துப் பனி வாரும் கண்ணவர் நெஞ்சம்      

கனற்றுபு காத்தி, வரவு!

அதாவது, தோழி தலைவியிடம் சொல்கிறாள், "செல்லுகின்ற வைகை ஆற்று வெள்ளத்தில் மிதவைமரம் செல்வது போல இரவெல்லாம் அவன் மார்பில் கிடந்தாய் தலைவி! அப்போது, கண்ணில் பனி மல்கக் கிடந்தாய். வைகை உடைப்பு அடைத்த இடத்தில் நீர் கசிவது போல அவனைப் பிரிந்த உனக்கு, இப்போது கண்ணீர் வருகிறது. அவன் வந்துவிடுவான். வெதும்பும் நெஞ்சோடு காத்திரு"


இவ்விளக்கத்தை vaiyan.blogspot.com - மூலம் தான் தெரிந்து கொண்டேன். அவருக்கு நன்றி. இப்படிப்பட்ட வைகையை கொஞ்சம் ஓவராக மிகைப்படுத்தி நல்லந்துவனார் புகழ்ந்திருக்கிறாரா என்பது போல தான் இப்போதைய வைகை இருந்தது. ஒரு ஓரத்தில் மட்டும் தான் நீரோடுகிறது. அதுவும் கருமையான நிறம். நீர் நுரைத்திருக்கிறது. வானத்தின் நட்சத்திரங்களைப் போல பிளாஸ்டிக் குப்பைகள் வைகையில் மலிந்துகிடக்கிறது. சமஸ் அவர்கள் சொல்லியது போல் ஒவ்வொரு மாவட்டத்திற்கு ஏற்ப பாடத்திட்டம் கொண்டு வருவதில் நடைமுறை சிக்கல்கள் பல இருக்கின்றன. அதைவிட இருக்கும் பாடத்திட்டத்துடன், அந்தந்த மாவட்டங்களுக்கு அந்தந்த மாவட்டங்கள் பற்றிய சிறப்பு வகுப்பு பாடத்துடன் எடுக்கலாம். அந்த மாவட்டத்தின் வரலாறு, தொழில்கள், தொழிற்சாலைகள், தொழில் வாய்ப்புகள், சூழல்கள், பிரச்சனைகள், அரசியல் நகர்வுகள், இயற்கை அம்சங்கள், என அன்றிலிருந்து இன்று வரை அம்மாவட்டம் பற்றிய தகவல் கொண்ட சிறப்புப் பாடமாக இருந்தால் நன்றாக இருக்கும். 


கீழடி அகழ்வாய்வு


கீழடி சென்றேன். தென்னை மரத் தோப்பினுள் அகழ்வாய்வு செய்த இடத்தைப் பார்த்தேன். மகதீரா படத்தில் வருவது போல் இந்த மாதிரி புராதன இடத்திற்கு சென்றால், நான் தான் அக்காலத்தில் அந்த உரை கிணற்றை வைத்தேன், அதை நானே இப்போது பார்க்க வந்திருக்கிறேன் என்ற பைத்தியகாரத்தனமான உணர்வு என்னை ஜாலி படுத்தும். இயல்பாக இங்கேயும் அது வந்தது. பக்கத்தில் சோட விற்று கொண்டிருந்த அண்ணாவிடம் பேச்சுக் கொடுத்தேன். இங்கு கிணறு தோண்டும் போது பானை கிடைத்தது, அதை வைத்து ஆராய்ச்சித் தொடங்கியது என்றார். உடன் அந்த தென்னைமரத் தோப்பின் உரிமையாளர் தனக்கு சொந்தக்காரர் தான் என பெருமையுற்றுக் கொண்டார். சரி கீழடி அருங்காட்சியகத்திற்கு செல்லலாம் என்று வண்டியெடுத்தேன், அது அங்கிருந்து ஒரு 2 கிலோமீட்டர். 


வழியில் ஒரு தென்னைமரத் தோப்பினுள் வயதான ஒருவர் தொட்டியின் அருகே குளித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். மணி 12 வேறு. உடனே குளிக்கலாம் என்று சேறு நிறைந்த தோப்பினுள் நடந்து அருகில் சென்றால் தான் தெரிகிறது, தொட்டியில் குளிப்பது ஒரு பெண். பாவாடையை இறக்கி அந்தப் புறம் திரும்பி முதுகு தெரிய குளித்துக் கொண்டிருப்பதைப் பார்த்ததும், ஒரு நூறு அடி தூரம் இருக்கும் இடத்திலேயே திரும்பி நின்று கொண்டேன். அந்தப் பெண்ணுக்கு ஒரு நாற்பத்தைந்து வயதிருக்கும். என்னை யாரென அங்கிருந்தே விசாரித்தார், நான் ஒரு ஆண் தான் குளிக்கிறார் என்றும், நானும் உடன் குளிக்கலாம் என்றும் நினைத்து வந்ததை விளக்க, "வா… வந்து குளிப்பா" என்றதும் அவர் எனக்கு அம்மா ஆகிவிட்டார். "குளிக்க வந்துட்டு என்ன தயக்கம்... வந்து குளி... நம்ம தோப்பு தான்" என்று இயல்பாக ஈரமான உடைகளை சரி செய்து கொண்டே அருகில் அவர் துவைத்து வைத்த துணிகளை எடுத்துக் கொண்டிருந்தார். நான் தொட்டியில் குளிக்க, அவரிடமே என் ஃபோனைக் கொடுத்து புகைப்படம் எடுத்துத் தரச் சொல்லி அங்கிருந்து அருங்காட்சியகம் கிளம்பினேன்.


கீழடி அருகில் உள்ள கிணற்றில் 


ஒரு முழு நாள் குழந்தைகள், குடும்பத்துடன் கீழடி அருங்காட்சியகத்தில் செலவிடலாம். அந்தளவுக்கு அருமையாக அமைத்திருக்கிறார்கள். அங்கு என்னைக் கவர்ந்தது, ஒவ்வொரு துறையாக சுவாரஸ்யமாக பிரித்து வைத்திருந்தது, VR, அக்காலத்தில் இரும்பு உருக்கும் முறை, ஆடை நெய்யும் முறைக்கான காணொலி, உரை கலன்களைக் கொண்டு கீழடியில் ஏற்படுத்தியிருந்த நீர் குழாய்கள்!, கீழடியில் கிமு ஆறாம் நூற்றாண்டில் அவர்கள் பயண்படுத்திய உணவு வகைகள், வெளியில் வந்தால் சங்க இலக்கியத்தில் சொல்லப்பட்ட மர வகைகளும், அதன் பாடல்களும் எழுதி அந்த மரத்தையும் நட்டு அங்கேயே வளர்த்துகிறார்கள், அங்குள்ள கேண்டீனில் பால் பணியாரம் இவையெல்லாம் கவர்ந்தது. அங்கு தான் தெரிந்து கொண்டேன் இறந்தவர்களை புதைப்பதற்கான ஈமத் தாழிகள் அப்படியே தோண்டப்பட்ட நிலையில் கொந்தகை என்னும் கிராமத்தில் இருப்பதை. அடுத்து அங்கு செல்லலாம் என்று கிளம்பினேன்.


கொந்தகை ஈமத் தாழிகள்

இறந்தவர்களை அப்படியே தாழிக்குள் வைத்து புதைத்திருக்கிறார்கள், இறந்தவர்களை எரித்து அவர்களது எழும்புகளை மட்டும் தாழிக்குள் வைத்தும் புதைத்திருக்கிறார்கள். இன்றும் அந்த ஈமத் தாழிகள் கிடைத்த இடத்திற்கு பக்கத்தில் தான் சூடுகாடு கொந்தகையில் இருக்கிறது! 


கீழடி, கொந்தகை, பொதுவாகவே மதுரையில் என்னை கன்னாபின்னாவென்று கவர்ந்தது, அங்கு ஒட்டப்படும் சுவரொட்டிகள், பேனர்கள் தான். காது குத்து, புதுமனை புகுவிழா, கெடாவெட்டு, நண்பன் இறப்பு, கல்யாணம், பிறந்த நாள் என வகை வகையான போஸ்டர்கள், அதைவிட அதில் உள்ள வசனங்கள்! ஆனந்த் என்ற நண்பனுக்கு 13வது ஆண்டு நினைவு அஞ்சலி போஸ்டர் ஒட்டியிருக்கிறார்கள்!, அதில் அந்த ஆனந்த் பெயரில் ‘ஆனந்த் பாய்ஸ்’ என்று ஒரு குழு வேறு ஆரம்பித்திருக்கிறார்கள். 13 ஆண்டு ஒரு நண்பனின் நினைவு நாளை கொண்டாடுகிறார்கள் என்றால், அந்த ஆனந்த் அவர்களுடன் எப்படி பழகியிருப்பான்?!, எப்படி இறந்திருப்பான்?! இப்படி ஆனந்த் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அவா வந்தது. அடுத்து இன்னொரு பக்கம், ‘நட்பின் இலக்கண்’ என்று நண்பனின் பிறந்த நாளைக்கு ஒரு பேருந்து நிறுத்தத்தின் கட்டிடம் முழுமைக்கு ஒரு பேனர்! நட்பின் இலக்கணமாக திகழ அப்படியென்ன செய்திருப்பான் இவன் என்ற ஆர்வம் வந்தது. 









என்னைக் கவர்ந்த சில போஸ்டர்கள்

அவர்கள் ஒட்டப்படும் போஸ்டர்களின் சிறப்பம்சங்கள் பின்வருமாறு :


1. போஸ்டர்களை வைத்தே அவர்கள் தேவர்களா? தேவேந்திரர்களா? என்று எளிமையாக விளங்கிக்கொள்ளலாம். முத்துராமலிங்கர், சுபாஸ் சந்திர போஸ் போஸ்டரில் இருந்தால் தேவர், விக்ரம் இருந்தால் தேவேந்திரர். 


2. அஜித், 300 ஸ்பார்டன்ஸ், தோனி படங்கள் இரண்டு பிரிவினர்களின் போஸ்டர்களிலும் பொதுவாக காணப்படுகிறது. 


3. சிவப்பு பொட்டுக்கும், மீசைக்கும் பிரதான இடம் அளிக்கிறார்கள்.


4. யாருக்கு விழாவோ அவர்கள் ஓரம் கட்டப்பட்டு தற்போதைய அதிமுக போஸ்டரில் இருக்கும் அண்ணாவைப் போல அமைதியாக இருக்கிறார்கள்.


5. அது என்ன விழாவாக இருந்தாலும் சரி, அந்த வாக்கியத்தில் வீரம் அல்லது வீரத்தை குறிக்கும் வார்த்தைகள் அவசியம். 


மாலை மதன் வீட்டிற்கு வந்தால், மதனின் அம்மா வடை, பாயாசம், இரண்டு வகை பொரியல், ரசம், சம்பார், முட்டை என அன்பினாலே அடித்தார். தனியாக பயணம் செல்வதில் உள்ள கூடுதல் நன்மை என்னவென்றால், ஒவ்வொரு நாள் ஒவ்வொரு நண்பனுடன் இருக்கலாம். அன்று இரவு இயேசு நாதர் உயிர்த்தெழுந்த ஞாயிறு. அதனால் தேவாலயங்களில் அழகான பெண்களுடன் மக்கள் கூடி தொழுது கொண்டிருந்தனர். இரவு 2 மணி வரை மதுரை நகரைச் சுற்றி அடுத்த நாள் ஆடுகளம் படத்தின் ‘என் வெண்ணிலவே’ பாடலின் மூடோடு ஊருக்கு இரயிலில் கிளம்பினேன். 


-சா.கவியரசன்.

17-04-2024






Comments

Popular posts from this blog

அந்த ஆங்கில வார்த்தை

நகுவா நயனா (சிறுகதை)

87 - 38A (சிறுகதை)